இன்றைய சினிமா:
ஜனநாதன் இயக்கிய பேராண்மை.
தாலீத் ஒருவனது நாட்டுப்பற்றை
காட்டும் படம்.

சமீபத்தில் நான் வாசித்த ஒரு முக்கிய நாவல் ஐரேனிபுரம் பால்ராசையா எழுதிய “வடலிமரம்”. இருந்த இருப்பிலேயே முழு புத்தகமும் வாசிக்கும் உணர்வை இந்நூல் தந்தது. புத்தகத்தின் தலைப்பை பார்த்ததும் முதலில் பெயர் சற்று குழப்பமாகத்தான் இருந்தது, அதென்ன வடலிமரம். பிறகுதான் தெரிந்தது பனை மரத்தின் இளம் பருவத்தை வடலிமரமென சொல்வார்கள் என. சரியாகத்தான் இப்பெயரை ஆசிரியர் வைத்திருக்கிறார், காரணம் இந்நாவலின் கதைக் களமும் இளம்பருவம் குறிப்பாய் விடலைப் பருவத்தை சார்ந்ததுதான்.
           விடலைப் பருவத்தில் இருக்கும் அனந்த கிருஷ்ணனும், சொர்ணாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். சாதியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்த அனந்த கிருஷ்ணனின் குடும்பத்தினர் இந்த காதலை எதிர்க்கின்றனர். இதை ஏற்க முடியாத ஜோடி ஊரைவிட்டு ஓடுகிறது. சொர்ணா ஆறு மாத கர்ப்பிணியாக  இருக்கும் நேரத்தில் அனந்த கிருஷ்ணனின் அப்பா சூழ்ச்சி செய்து ஊருக்கு வர செய்து இந்த ஜோடியை பிரிக்கின்றனர். பிரிந்து வாழும் சொர்ணாவுக்கு ஒரு மகள் பிறக்கிறாள். பிரிந்து வாழ்ந்த போதும் அனந்த கிருஷ்ணன் சொர்ணாவுடன் தொடர்ந்து வாழ பல முயற்சிகள் எடுக்கிறான். இருவரும் இணைந்தார்களா இல்லை அனந்த கிருஷ்ணனின் நிலை என்னவாயிற்று என்பதே இந்த நாவலின் இறுதிப் பகுதி.
           எங்கையோ கேட்ட, பார்த்த கதையாய் இது தோன்றினாலும் நாவல் சொல்லப்படும் விதம் அருமையானது, குறிப்பாய் தினமும் சாதம் சாப்பிட்டாலும் அதன் சுவை ஒவ்வொரு நாளும் வித்தியாசப்படுவது போல. இந்த நாவலை வாசிக்கும்போது நமது மனதிலுள்ள விடலைப்பருவ நிகழ்வுகள் சிறிது எட்டிப் பார்க்கும். காரணம் காதலை வைத்து எழுதப்பட்ட இந்நாவல் காதலித்தவர்களின் நிமிடங்களில் சிறிது நேரம் நின்றுவிட்டு செல்வதுதான். எழுத்து நடைக் கூட சோர்வற்ற எளிய முறையில் வருகிறது. அழகிய ஒரு பனைக் காட்டுக்குள் நம்மை இழுத்து செல்கிறது.
           குறிப்பாக அனந்த கிருஷ்ணனும் சொர்ணாவும் தங்களது காதலை முதலில் வெளிப்படுத்தும் இடம். பனை ஓலையில் எழுதப்பட்ட I Love You  அவளது இதயத்தை அசைக்கிறது. அவளும் பதிலுக்கு தனது காதலை பனை ஓலையிலேயே  பதித்து அனுப்புகிறாள், அதுவும் அந்த பாயின் நடுப்பகுதியில். உறங்கும்போதும் அவள் இதயத்தின் அருகே இருக்க வேண்டும் என்பதை கவித்துவ முறையில் ஆசிரியர் கூறியிருப்பார். இன்னொரு சிறப்பு என்னவெனில் காதலை வெளிப்படுத்தும் இந்த கருவி தமிழ் நாவல்களுக்கு புதியது என கருதுகிறேன்—பனையோலை.
           பிரச்னைகளோடு முழு வாழ்க்கையையும் பெண்கள் வாழ்ந்து முடிக்கிறார்கள் என்பதை இந்த நாவல் பல இடங்களில் தெரியப்படுத்தி வருகிறது. ஆங்காங்கே பனை தொழிலார்களின் வாழ்வும் கூரிய முறையில் எழுத்தாளரால் எடுத்துக் காட்டப்படுகிறது. மொத்தத்தில் புதுமையான ஒரு அனுபவத்தை இந்த நாவல் வாசகர் பரப்பில் ஏற்படுத்துகிறது. உயர்ந்து நிற்கும் பனை மரங்களின் கீழே சிதைந்து கிடக்கும் வாழ்க்கைக்கான மறுபதிப்பே இந்த வடலிமரம்.
நூலின் பெயர் : வடலிமரம்
ஆசிரியர் : ஐரேனிபுரம் பால்ரசையா
விலை : 80
போன் : 9791820195
இமெயில் : 1gmrajaia@gmail.com



எழுத்து : Dino LA

0 comments:

Post a Comment

 
Top