வாழ்வின் பல்வேறு பரிமாணங்களில் பழுத்த பருவமே முதுமை. உலகில் உள்ளோரால் அடுத்தவனுக்கு கிடைத்து விட்டதே என பொறாமைப் படாமல் இருக்கிற ஒரே விஷயமான மரணமும் இப்பருவத்திலே நம்மோடு தங்கிவிட துடிக்கிறது. மரணம் என்றதும் முதுமை நம் கண்ணுக்குள் நிற்பது போல முதியவர்களை பார்க்கும் போது மரணம் என்ற ஒன்றே நமக்கு அளவுகோலய் இருக்கிறது.

எனது தாத்தாவின் மரணத்திற்கு சென்ற போது அவரது நெருங்கிய நண்பரான 87 வயது முதியவர் ஒருவரை பார்த்தேன். என்றும் இல்லாமல் அவரது உடல் ஒரு மெல்லிய நடுக்கத்துக்கு உள்ளாகி இருந்தது. அதில் நட்பு மட்டும் தெரியவில்லை தனது நாட்களும் குறிக்கப்பட்டதின் நடுக்கமே அது. தந்தையின் முதுமையை ஏற்று வாங்கி தனது இளமையை தானம் செய்யும் புராண பாத்திரங்கள் இன்று கேப்பதற்கு சுவையாக இருக்கலாம். ஆனால் அப்படி ஏதேனும் அதிசயம் நடக்க வாய்ப்பிருந்தால் முதியோர்கள் என்கிற ஒரு இனமே நாட்டில் இல்லாமல் போய்விடும் என்னும் மகிழ்வு சிந்தனை பலருக்கு இருக்கலாம். ஆனால் பருவ வயதில் நம் மனதில் வரும் காதலை போல முதிய வயாதனது நமக்கு தரும் வாய்ப்புகளை மகிழ்ந்து ஏற்பதே ஒட்டுமொத்த வாழ்வுக்கான முழுமையாக இருக்கும்.
நம் சமூகத்தை போல் வார்த்தைகளை வீணாக்கும் சமூகம் உலகில் கிடையாது. (சந்தேகமிருந்தால் காதலிப்பவர்களை பாருங்கள் வார்த்தைகள் எப்படி அர்த்தமின்றி வீணாக்கப்படுகிறது என). வார்த்தைகளின் தேவையை நாம் பூரணமாக அறிய வேண்டுமென்றால் இப்பருவமே ஏற்றது. பொதுவாக ஆண்களுக்கு தங்களுடைய பழைய வாழ்க்கையை டெராராக காண்பிப்பதில் ஒரு அலாதி பிரியம் உண்டு. வார்த்தைகளின் வழியாக அவர்கள் தங்களது வாழ்வை கடந்த காலத்திலிருந்து கடத்தி நிகழ்காலத்திற்கு எடுத்து வருகின்றனர். சில பழைய நினைவுகள் அவர்களின் வாயிலிருந்து வரும்போது ஏற்படும் மன உணர்வை கவனித்தால் தெரியும் இளமையில் சாதாரணமாக இருப்பவை முதுமையில் சாகசமாய் மாறுவது. அதிலும் முக்கியமாய் தங்களது முதல் காதலை பகிரும் முதியவர்களின் முகங்களை பாருங்கள் ஒரு நிமிடத்தில் இறைவனை கண்ட பக்தனின் பரவசம் அதிலிருக்கும்.
உடல் பிரச்சனைகளும், மனப் பிரச்சனைகளும் நிறைந்த இப்பருவம் பொதுவாகவே தனிமையை நாடாது. வெளிநாடுகளில் பார்த்தால் முதிய தம்பதிகள் தெருவில் கூட ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு செல்வது. நம் நாட்டின் நிலையோ விசித்திரமானது, தோளுக்கு மேல் மகன் வளர்ந்து விட்டாலே இந்தியா பாகிஸ்தான் போல கணவன் மனைவி விலகியே இருக்க வேண்டும் என ஒப்புக்கொள்ள முடியாத ஒழுக்க நெறி பின்பற்றபடுகிறது. சரி முதுமையிலாவது சேர்ந்திருக்கலாம் என்று பார்த்தால் நமக்காகவே கட்டப்பட்டிருக்கின்றன முதியோர் இல்லங்கள். எது எப்படியோ ஒருவன் தினமும் பேசும் கெட்ட வார்த்தைகளின் அளவு கூட அன்பு கலந்த ஆதரவான வார்த்தைகள் முதியவருக்கு சென்று சேருவதில்லை.
0 comments:
Post a Comment